மாதிரி பிரதேச செயலகங்கள் - மக்கள் சேவைக்கான மற்றொரு மைல்கல் பிரஜைகள் உரிமைப் பட்டயம் 01.08.2007 தொடக்கம் நாட்டிலுள்ள பிரதேச செயலகங்கள்‚ மாவட்டச் செயலகங்கள் அனைத்தும் மக்களுக்கான சேவையை வழங்குவதில் புதிய வினைத்திறனுடன் செயற்படவிருக்கின்றன. இதுவரை காலமும் பிரதேச செயலகங்கள்‚ மாவட்டச் செயலகங்களுக்குச் செல்லும் பொது மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு பொருத்தமான வழிகாட்டுதல்களைப் பெற்றுக்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கியிருந்தனர். இவ்வாறான நிலைமையினைக் கருத்தில் கொண்டு செயலகங்களின் நுழைவாயிலில் அமைக்கப்படும் ‘கரும பீடம்’ (Front office) முக்கியத்துவம் பெறுகின்றது. இவ்வலுவலகத்தில் நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக வருகின்ற பொதுமக்களுக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்கி அவர்கள் தமது தேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் பூர்த்தி செய்துகொள்ள உதவுவார்கள். அதே நேரம் தமது தேவைகளைப் பூர்த்தி செய்ய வருகின்ற பொதுமக்களுக்கு இன்றியமையாத கடப்பாடு உண்டு. அதாவது அவர்கள் தாம் என்ன தேவையைப் பூர்த்தி செய்வதற்கு வருகின்றாரேர அது தொடர்பான சகல ஆவணங்கள்‚ அல்லது தகமைகளையும் கொண்டிருத்தல் வேண்டும். தேவையான ஆவணங்கள் பற்றிய தகவல்களை கிராம சேவை அலுவலர்களிடம் அல்லது பிரதேச செயலகங்களில் பெற்றுக்கொள்ளலாம். அவ்வாறு பூர்த்தி செய்யுமிடத்து கருமபீடத்தில் குறிப்பிட்டுக் காட்டப்பட்ட காலக் கிரமத்தில் தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படும். பொது மக்களின் தேவைகள் / சேவைகள் அவர்கள் உரிய தகமைகளைப் பூர்த்தி செய்திருந்தும் உரிய காலத்தில் அத்தேவைகள் பூர்த்தி செய்யப்படாதிருக்கும் பட்சத்தில் அவை தொடர்பாக கருமபீடத்தில் முறைப்பாடுகளை எழுத்து மூலமாக மேற்கொள்ள முடியும். இம்முறைப்பாடுகள் உடன் கவனத்தில் எடுக்கப்பட்டு அது தொடர்பாக முறைப்பாட்டாளருக்கு உடன் பதில் அனுப்பப்படும்.
மேற்படி பிரஜைகள் உரிமைப் பட்டயம் பொது மக்களுக்கு குறிப்பிட்ட நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பாக பூரணமான வெளிப்படுத்தல்களை மேற்கொள்கின்ற அதே நேரம் பொதுமக்களும் தமது முறை வரும்வரை காத்திருந்து உத்தியோகத்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது உதவியாக அமையும்.
இம்மாதிரிப் பிரதேச செயலகங்களை ஒத்த நிகழ்வு ஒன்று இன்று (01.08.2007) யாழ்மாவட்டத்தின் அனைத்துப் பிரதேச செயலகங்கள் / உதவி அரசாங்க அதிபர் பணிமனைகளிலும் மாவட்டச் செயலகத்திலும் நடைபெறவுள்ளது. மாவட்டச் செயலக நிகழ்வுகள் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு.க.கணேஷ் அவர்களுடைய தலைமையில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக யாழ்.பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேரா.இ.குமாரவடிவேல் அவர்களும் சிறப்பு விருந்தினராக முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சு செயலாளரும் தற்போது “UN - HABITAT” அமைப்பின் யாழ்.மாவட்ட முகாமையாளருமான திரு.க.பரமேஸ்வரன் அவர்களும் கலந்துகொள்கின்றனர்.
இந்த ஏற்பாட்டின் மூலம் மக்கள் சேவை மேலும் சிறப்பாக அமைய வழிவகைகள் ஏற்படும் எனத் திடமாக நம்புகின்றோம்.